Friday, August 26, 2005

மதத்தில் மற/றைந்தது மாமதயானைநாகூர் (உ)ரூமி சல்மாவின் "இரண்டாம் ஜாமங்களின் கதை" ஐச் சாமியேறி உறுமிச் சாட்டையாற் சாத்தி வேப்பிலையால் உருவி எடுத்து விமர்சித்திருக்கிறார் (=விமர்சையாய்த் திருகியிருக்கிறார்). (இங்கே, 'மைலாஞ்சி'க்கு அவரிடமிருந்து வந்த விமர்சனமெனக் கேள்விப்பட்டதையிட்டு "மீண்டுமொரு முறை" என்று சொல்வதா அல்லது அவரின் பதிவுகளை இட்டு "வழக்கம்போல" என்று சொல்வதா என்று எனக்குள்ளே குழப்பமேற்பட்டது; அதனாலே, அப்படியான இடைச்செருகற்கூற்றுகளை மேற்படி வசனத்திலே நான் நுழைக்கவிரும்பவில்லை)

தட்டச்சுச்செருமலான ஆரம்பப்பந்திக்கு அடுத்த வரிகளாக இங்கே சொல்லிக்கொள்ளவேண்டியவை இரண்டு:

1. 'இரண்டு ஜாமங்களின் கதை' இனை நான் இன்னும் வாசிக்கவில்லை; அதனாலே, நூல் குறித்து வாசகனாகச் சொந்தக்கருத்துச் சொல்ல எனக்கு இக்கணத்திலே ஏதுமில்லை. சொல்வதெல்லாம், ரூமியின் புத்தகப்பார்வை குறித்த என் கோணற்/ப்பார்வைவழிப்பட்டதே.

2. இவரின் இஜாக விமர்சனத்தினை வாசிக்கமுன்னாலேயே, சல்மா குறித்தும் ரூமி குறித்தும் எனக்கு இன்னார் இப்படித்தான் எழுதுவார், எதிர்வினைப்பாரென்று அழுத்தி குத்திக் கொங்கிறீட் போட்டமாதிரியான நிலைப்படு பிம்பமுண்டு.

சல்மாவின் நூல் பற்றி ரூமியின் விமர்சனம் பார்த்த பின்னால், சல்மா பற்றிய பிம்பம் எனக்குள்ளே சற்று ஆடி நடுங்கித் தளும்பிப் போயிருக்கின்றது; ரூமியின் பிம்பம், இன்னும் உறுதியாய் உருக்காகியிருக்கிறது.

புதினம் பற்றிய ரூமியின் கருத்து, அண்மையிலே திவாகர் என்பவர் வெங்கடரமணனின் "குவாண்டம் கணிணி" நூல் பற்றி இந்திய ருடே இலே எழுதிய விமர்சனத்தை ஒத்ததாக இருக்கின்றது; புத்தகத்தை(யும் எழுதியவரையும்) விமர்சகர் என்ற சுதந்திரத்தோடு ஒரு வாங்கு வாங்கிவிடலாமென்ற திட்டத்துடனேயே வரிந்து கட்டிக்கொண்டு எழுதியதாக ஒரு தோற்றம்.

புதினம் குறித்து ரூமியின் முடிவின் சாராம்சத்தினை அவரின் சொற்களிலேயே கேட்டால்,

இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை சல்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம். 2. மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம். 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்பதால் இந்த இரண்டையும் ஜாமத்துக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளலாம

அவர் சாரம்சத்தினைத் தனது இந்தக்கதை குறித்த முடிவென்றே சொன்னாலும் இரண்டாங்கட்டக் கட்டுடைப்புக்கு நாங்கள் நகர்ந்துவிடலாம்; அவரோ ஒரு படி மேலே போய் குறித்த ஒரு புதினத்தின் முடிவிலே எழுத்தாளரின் எழுதுபண்புக்குறித்தொடையாக ஒரு பொதுக்கருத்தினைக் கட்டியெழுப்பி, "சல்மா ஸ்பெஷல்" என்று குருமா போட்டுவிடுகிறார். இதனாலே நமக்குத் தெரிவதென்னவென்றால், சல்மாவின் முன்னைய படைப்புகள் குறித்தும் இவர் இதே கருத்தினைத்தான் கொண்டிருக்கின்றார். மூடிய நம்பிக்கை கொண்டவரென்றும் தன்னைத் தானே சொல்லியிருப்பதாலே, இது குறித்து நாங்கள் ஆச்சரியப்படத்தேவையில்லை; ஆனாலும், இப்புதினத்தை வாசிக்கும்போது, மூடியைக் கொஞ்சம் திறந்து வைத்துக்கொண்டு, வாசித்திருக்கலாமே, விமர்சித்திருக்கலாமேயென்ற ஆதங்கம் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

இப்போது, இவர்கூறும், "போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம்" பற்றி;

நிச்சயமாகப் போலித்தனமான பெண்ணியக்குரல்கள் படைப்புலகத்திலே ஆண்கள், பெண்கள் இரு சாராரினாலும் பல காரணங்களுக்காக எழுதப்பட்டு வரவே செய்கின்றன; சல்மாவின் புதினத்தினை ரூமி எடுத்துச் சொல்வது தவிர்த்து நான் முழுமையாக வாசிக்கவில்லையாதலால், இப்புதினம் எப்படியானதென்பது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப்போலித்தனமான பெண்ணியக்குரல் எழுவதிலே துணிச்சலென்ற போர்வையிலே வெளிப்படுத்தும் வக்கிரங்களும் அடங்குமென்கிறார்; ஜெயமோகனின் கன்னியாகுமரி சொல்லாத வக்கிரங்களை கதை பண்ணும் வக்கிரத்துக்காவே சல்மா சொல்லியிருக்கின்றாரா என்று யோசித்தால், கதையிலே சொல்லப்படும் வக்கிரங்கள் குறித்து, ரூமி தெரிந்தெடுத்து ஒரு பட்டியல் போட்டிருக்கின்றார்.

அந்தப்பட்டியலைப் பார்க்கும்போது, கே. டானியலின் 'பஞ்சமர்' புதினத்துக்கு வெளிவந்ததாக வாசித்த எதிர்மறைக்கருத்து ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகின்றது; "சாதிமான்களின் பெண்களெல்லாம் பஞ்சம ஆண்களுக்காகத் துடிக்கின்றார்கள்; கள்ளமாக உறவு கொள்கின்றார்கள் என்பது போல டானியல் கதை எழுதியிருக்கின்றார்." ஒரு விதத்திலே பார்த்தால், புதினம் என்பது குறித்த சம்பவங்களைத் தேர்ந்து தம்முள்ளுள்ளே உள்ளிழையத் தொடர்போடு தொகுத்துத் தருவதுதான்; சம்பங்களைத் தேர்ந்தெடுப்பதென்னும்போது, வெள்ளைத்தளத்திலே கறுப்புப்புள்ளிகளைத் தேரும் விகாரப்படுத்தலுடனான தேர்வாகத்தான் முடியும். சமூகத்தின் முழுக்குறுக்குவெட்டினையும் பிரதிபலிக்கும் மாந்தர்களை, நிகழ்வுகளை, கதையிலே சொல்வது எப்போதும் சாத்தியமாகாது. ஒரு மனிதனின் இயல்பிலே நல்லதும் கெட்டதும் கலந்திருக்குமென்பதைக்கூட அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, இஸ்லாமிய ராமராஜ்யம் (sic) ஒன்றிலே சல்மா கதை படைக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றாரோ என்பதாகவும் ஐயமெழுகின்றது. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசத்தாயினைமட்டுமே சாத்தியமானவளென எண்ணிப் பரவசமடையும் அவருக்கு, தென்னாசியாவிலே நிகழுவதாக நாம் அடிக்கடி வாசிக்கும் "கௌரவத்துக்கான (பெண்)கொலை"களை ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். மனிதர்களெல்லோரும் ஒரு வகைப்பட்டவர்களில்லை. அக்கினிப்பிரவேசத்தாய்க்கிருக்கும் சாத்தியம் கௌரவகொலை செய்யும் தாய்க்குமுண்டு. சல்மாவினை கருத்தினை மறுத்து, ரூமி சொல்ல/செய்ய முயல்வது தாய்மை (பேசப்படும் பெண்மாந்தர்கள் எல்லோரும் தாய்களில்லாதபோதிலே திரைப்படங்களிலே எதுகைமோனைக்குப் பயன்படும் "பெண்மை" என்ற பதத்தை இங்கே கொள்வதிலே தவறில்லை) என்ற திரு(கு)நிலைப்படுத்தலூடாக, பெண் என்பவளின் இயல்புகளை, அவர் விழையும் விதத்திலே தன் நம்பிக்கைக்கட்டுக்குள்ளே அடக்கமுயல்வதுதான். மறுபுறத்தில், இவற்றுக்கு மாற்றான பாத்திரங்களை விதந்தோத்தக்கூடிய சம்பவங்களையும் மாந்தர்களின் சமூக நெறிக்கோவையின்படி நல்லதென வரையறுக்கப்பட்ட இயல்புகளையும் ஓரிரண்டு முன்வைக்கும்போது, அவை சப்பைக்கட்டுகளாக ரூமிக்குத் தோன்றுகின்றன.

சாத்தியமில்லாத சில சம்பவங்கள் கதையிலே சொல்லப்படுவது குறித்து ரூமி சுட்டியிருப்பதிலே உண்மைகூட இருக்கலாம்; முற்றாக மறுக்கமுடியாது; முஸ்லீம் வாசகர்களுக்குமப்பாலான வாசகவட்டத்தின் விரிவு கருதி, சல்மா தானறிய நடந்திருக்கமுடியாத, அல்லது நடந்தவற்றினை உருப்பெருக்கி ("பலான திரைப்படம்" குறித்த சம்பவம்) சிலவற்றினையும் சேர்த்துப் பொய்யான தன்மையைக் கொடுத்திருக்கலாம். இவ்வகைப்பட்டு இந்திய வாசகர்களைக் கருத்திலே கொண்டெழுதும் ஈழத்து எழுத்தாளர் தொடக்கம் புலம்பெயர்ந்தாரைக் கருத்திலே கொண்டு படம் சமைக்கும் கோடம்பாக்கக்காரர்கள்வரை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், அந்நிலையிலேகூட, சல்மாவின் புதினத்தின் மீதிச்சம்பவங்களை நிராகரிக்க முடியாதென்றே படுகின்றது; தமிழக முஸ்லீங்கள் குறித்து கடந்த பத்திருபதாண்டுகளிலே வந்த புதினங்களிலே, தோப்பில் மீரானின் 'கூனந்தோப்பு', 'துறைமுகம்' என்பன குறிப்பிடத்தக்கன. அவற்றினை எடுத்தாற்கூட, அவற்றிலும் சல்மா புனைந்த களத்துக்கும் சம்பவங்களுக்கும் மாந்தருக்கும் சமனான கூறுகளைக் காணலாம். அந்நிலையிலே, சொல்லப்படும் கருத்தினையும் சொல்கின்றவரையும் குறித்து, போலித்தனமான பெண்ணியக்குரலென்றோ, வக்கிரமென்றோ அல்லது 'சல்மா ஸ்பெஷல்' என்றோ ரூமி தட்டிவிட்டுப்போவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.

இரண்டாவதாக இவர் வந்த முடிவு, "மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம்." இந்த முடிவினை வாசித்தபோது, Eco இன் "Der Name der Rose" இலே சிரிப்பதனை இறைக்கெதிரான பண்பென மறுதலித்துக் குற்றமாகக் கருதி குருமடத்து நூலக நூல்களிலே விஷம் தடவி வாசிப்பாரைக் கொலை செய்யும் மடப்பாதிரிதான் ஞாபகம் வந்தார்.

Jorge de Burgos: Laughter is a devilish whim which deforms, uh, the lineaments of the face and makes men look like monkeys.
William of Baskerville: Monkeys do not laugh. Laughter is particular to men.
Jorge de Burgos: As is sin. Christ never laughed.
William of Baskerville: Can we be so sure?
Jorge de Burgos: There is nothing in the Scriptures to say that he did.
William of Baskerville: And there's nothing in the Scriptures to say that he did not. Why, even the saints have been known to employ comedy, to ridicule the enemies of the Faith. For example, when the pagans plunged St. Maurice into the boiling water, he complained that his bath was too cold. The Sultan put his hand in... scalded himself.

ஒரு படைப்பாளி தன் சூழல் குறித்துத் தன் கருத்துச்சுதந்திரத்தோடு எந்தவித எழுத்து(ச்சு)த்தியோடும் தன் கருத்தினை வெளிப்படுத்தலாம். சல்மா இப்படியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்; இதிலே ரூமிக்கு எழுத்து உத்திதான் முக்கியமாகியிருக்கின்றதென்றால், அவர் கிறீஸ்துவுக்கு முன்னால், ஐந்தாம் நூற்றாண்டிலே Aristophanes இலிருந்து தனது அவதானத்தினை ஆரம்பிக்கவேண்டும். அரசியல்வாதிகளை விரும்பியவாறு பகிடி செய்கிறோம்; திரைப்படநடிகநடிகைகளை விரும்பியவாறு பகிடி செய்கிறோம்; மாற்றுச்சமூகத்தினரை இப்படியானவர்களென வரிச்சுக்கட்டி அடைத்துப் பகிடி பண்ணுகிறோம். அடுத்துப்படுத்திருக்கும் மனைவி பற்றியே "ஜோக்" அடிக்கின்றோம்; மதக்கருத்துகளுக்கும் மாதாக்களுக்கும்மட்டும் புனிதம் போட்டு பகிடிக்கு விலத்தப்பட்டதென வைக்கவேண்டுமென்பதென்ன நியாயம்?

இடையிலே ரூமி தன் விமர்சனத்திலே தனக்கு வரக்கூடிய எதிர்ப்புகளை எண்ணி எச்சரிக்கையாக ஒரு குண்டு துளைக்காக்கவசத்தினை மாட்டிக்கொள்கிறார்:

இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்).

கேள்விகளை எழுப்புதலுக்குப் பதில்கள் சொல்லப்பட்டு நீர்த்துப்போய்விட்டதென்கிறார்; (கேள்வி நீர்த்ததா, அல்லது, பதில் நீர்த்ததா என்பது இவரது வசனத்திலிருந்து தெளிவாகவில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்) ஆனால், கேள்விகள் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லையா? பதில்கள் மட்டுமே நடைமுறையிலே தீர்வாகாது; நாளாந்த வாழ்க்கையிலே தீர்வு ஏற்படும்வரை கேள்விகள் ஒரேதன்மையானவை என்றாலுங்கூட எழுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதேபோல படைப்புகளிலே கேள்விகளெழுப்புவதை "முற்போக்கென்றோ ஆதிக்கத்துக்கு எதிரான குரலென்றோ எழுத்திலே பதிவு செய்வதைச் சிலாகிப்பது" ஓர் ஆர்ப்பாட்டமும் அதீத வேஷமும் கொண்ட ஆடம்பர அவலமாகத் தமிழ்ப்படைப்புலகிலே காணக்கூடியதாகவிருக்கின்றது என்பதை பெருமளவுக்கு நாம் ஒத்துக்கொள்ளலாம் (இத்தருணத்திலே, தமிழ்ப்படைப்புலகின் நூல்களின் அறிமுகவுரைகளிலே, தன் நண்பர்களின் நூல்களுக்கான விமர்சனங்களிலே புத்தகவெளியீட்டுவிழாக்களிலே, எழுத்தாளர்களைப் பாராட்டி இதேவகையான முற்போக்குப்பதங்களை, அமெரிக்காவிலே, "Great" என்று பயன்படுத்துவதற்கீடான சொற்களை, "சல்லிக்கு ரெண்டு சொல்லு" என ரூமி அள்ளி வழங்குகின்ற பொய்மை கொண்டவரில்லை என்றே நம்புவோம்). தனிப்பட சல்மா குறித்தும் அப்படியாகவே உயர்வுநவிற்சியாய் விதந்தோத்தி, ரவிக்குமார் சொல்லியிருப்பதாகவும் வைத்துக்கொள்வோம்; ஆனால், அதற்காகமட்டும் ரூமி, "அதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் அல்ல. பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்" என்றெழுதுவது இவரின் கற்பனை வளர்ச்சியையோ வரட்சியையோ காட்டுவதாக மட்டுமல்ல, அவர் சுட்ட விழைவதுபோல, பெண்களை மதிக்கின்ற முன்மாதிரியாகவும் ("மோகமுள்" அதைச் செய்ததா என்பதை அம்பை, கோ. ராஜாராம், வாசித்தவர்கள் கருத்துக்கு விட்டுவிடுவோம்) தெரியவில்லை. அப்பாவி ஏழைப்பெண்ணைக விபசாரியெனக் கல்லாலடிப்பதற்கும் "பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான்" என்றெழுதித் தன் நம்பிக்கைக்கு மாறான கருத்துள்ள பெண்ணெழுத்தாளரைச் சொல்லாலடிப்பதற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.

சல்மா வேண்டுமென்றே எழுதியிருக்கின்றாரா என்று ரூமியின் விமர்சனத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எனக்கேதும் சொல்லமுடியாது; சல்மா குறித்து மட்டுமல்ல, பெரும்பாலான பெண் கவிஞர்கள் குறித்து எனக்கும் ஓர் ஆதங்கம் ஓரமாகவிருந்தது (சிலர் குறித்து இன்னமுமிருக்கின்றது); பெண்களின் துயரங்களைக் குறித்து - குறிப்பாக, ஆண்களைச் சாடி- எழுதுகிற இவர்களிலே எத்தனை பேர் மெய்யாகவே தமக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோ அல்லது தமக்கு வாய்ப்பிருக்கும் சந்தர்ப்பங்களிலோ அத்துயரங்கள் குறித்து எதிர்நடவடிக்கைகளாக எதனையேனும் நடைமுறையிலே செயற்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே அதுவாகும். அச்சிலும் இணையத்திலும் உற்பத்தியாகும் வெறும் கவிதையும் கதையும் கட்டுரையும் மட்டுமே எதையும் சாதித்துவிடமுடியுமென நான் நம்பவில்லை.

ஆனால், ஒரு படைப்பினை விமர்சிக்கும்போது, இரண்டு வழிமுறைகளிலே வாசிக்க/விமர்சிக்க வாய்ப்புண்டு; ஒன்று, எழுத்தாளரினையும் படைப்பு சம்பந்தமான எழுதப்பட்ட காலம், சூழல் போன்ற புறச்சூழல்களை முழுக்க எண்ணத்திலிருந்து உரித்து ஒதுக்கிவைத்து, படைப்பினை மட்டுமே முன்னெடுத்துக்கொண்டு, அதன் ஆழம் அகலத்தினை வெளிப்படையான கருத்து, சூட்சுமசொற்பயன்பாடுகளினை வைத்துப் பார்ப்பது; மற்றது, படைப்பாளியின் தனியாள் பண்புகளையும் ஆளுமையையும் படைப்பின் புறச்சூழல்களையும் உள்வாங்கிப் படைப்பினை வாசித்தல். இரண்டு நிலைகளிலுமே வாசகர் தன் நிறுவப்பட்ட நம்பிக்கைக்கோவையை விலத்தி வைத்துவிட்டு வாசிக்கமுடியாதுபோனாலுங்கூட, நிச்சயமாக, ஒரு படைப்புக்கு இந்த இரு விதமான விமர்சகர்களும் (அதாவது, வாசகர்களும்) இருக்கவே செய்வார்கள். பல சந்தர்ப்பங்களிலே இந்த இரண்டு பார்வைகளூடாகவும் காணப்படுகின்றவை ஒத்திருக்க வாய்ப்பிருக்காது; ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளுக்கும் படைப்பாளிகள் குறித்து மாறுபட்ட கருத்துகளுக்கும் வர வாய்ப்பிருக்கின்றன.

அந்த வகையிலே, படைப்பையும் படைப்பாளியையும் சேர்த்துப்படிக்கும் இரண்டாம்வகை விமர்சகராக, சல்மா குறித்தும் அவரது சகோதரர் மனுஷ்யபுத்திரன் குறித்தும் அறிந்திருக்கும் ரூமிக்கு சல்மா குறித்து அவருடைய சொந்தவாழ்க்கை குறித்தும் சொல்லக் எதிர்மறையான கருத்திருக்கலாம்; (சல்மா மனுஷ்யபுத்திரன் சகோதரி என்பது காரணமாகவும் கனிமொழி கருணாநிதி புதல்வி என்பது காரணமாகவுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றார்களென்ற கருத்து என்னிடமும் இருந்ததென்பதை இங்கே சுட்டிவிடுகிறேன்; சல்மா சில ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கைக்கு முஸ்லீம் பெண்கள் மகாநாடு ஒன்றுக்குப் போனபோது சேரன் தனக்குச் சொன்னதை வைத்தே இலங்கைநிலை குறித்துப் பார்த்தவிதத்திலும் எனக்கு முரணுண்டு; ஆனால், அவை இப்படைப்புக்கு அப்பாற்பட்ட புறக்காரணிகள்; அதனால், அவர் இலங்கை குறித்துக் கவிதையோ கதையோ எழுதாதவரை அவருடைய படைப்பினைக் குறித்து என் பார்வை இப்புறக்காரணிகளை உள்வாங்கி இருக்க வாய்ப்பில்லை.) ரூமியின் இவ்வெதிர்க்கருத்தினை நியாயமென்றே கொள்வோம். ஆனால், சல்மாவின் படைப்பினை அத்தியாவசியமற்ற தோல்வியான அழுகிய முட்டை என்று சொல்லுமளவுக்கு இப்புறக்காரணி மட்டும் போதாது; அதைத் தீர்மானிப்பவை இரண்டு: ஒன்று, நடைமுறையிலே, சல்மா சொன்ன பிரச்சனைகள் (கேள்விகள்) இன்னும் எதிர்நோக்கப்படுகின்றதா என்பதும் அவற்றுக்கான தீர்வுகள் (நடைமுறைப்படுத்தப்படும் பதில்கள்) எந்நிலையிலே சாத்தியப்பட்டிருக்கின்றன என்பதும்; இரண்டாவது, இந்தப்பிரச்சனைகள் குறித்த பின்புலத்திலே எழுதப்பட்ட முன்னைய படைப்புகளிலும்விட, சல்மா எந்தவளவுக்கு தன்னைத் தனித்துக்காட்டும்விதமாகப் படைப்பினைத் தந்திருக்கின்றாரென்பது.

உயிர்களின் தோற்றம் குறித்து, அறிவியலாளர் "குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்" என அணுகும் விதத்துக்கும் சமயவாதி "ஆண்டவன் படைத்தான் எங்கிட்டே கொடுத்தான்" என்று அணுகும் விதத்துக்கும் வித்தியாசமுண்டு. எது சரி பிழையென்பது இருக்கட்டும்; ஆனால், அவை குறித்து புதிய சிந்தனைகளும் கருத்துவிரிவாக்கத்துடனும் விவாதிக்கப்படக்கூடாதெனச் சொல்லமுடியுமா? அப்படியாகவிருந்திருந்தால், இன்றைக்குச் சமயவாதிகள் இன்னொரு புதுக்கருத்தோடு வந்திருக்கமுடியாது. இது போலத்தான் ரூமி கேட்கப்பட்ட கேள்விகள்- சொல்லப்பட்ட தீர்வுகள் பற்றிச் சொல்வதற்கும் பதில் சொல்ல முடியும். சரி, ரூமி சுட்டிச்சொல்லும் கேள்விகள் தீர்வுகள் சொல்லப்பட்டவைதானென்றே வைத்துக்கொள்ளலாம்; ஆனால், தீர்வினை யாரோ எந்த மதநூலிலேயோ கட்டுரையிலேயோ சொல்லியிருக்கின்றாரென்பதற்காக மட்டும், ஒரு கதையின் பாத்திரங்கள் இயல்பாகப் பேசாமல், வெட்டிவைத்துவிட்டுப் பேசாமற் போக எல்லா நிலைகளிலும் முடியுமா? வேண்டுமானால், அதைத் தவிர்க்கும் விதத்திலும் சொல்லும் உத்தியிலும் படைப்பாளி தோற்றிருக்கின்றார் வென்றிருக்கின்றாரென்று நாம் பேசலாம்; அதை விட்டுவிட்டு, இந்தக்கேள்விகளுக்குப் பதில் ஏற்கனவேயுண்டு என்ற விதத்திலே, ஒரு மார்க்க அறிஞர் பேசலாம், ஆனால், ஓர் இலக்கியத்திறனாய்வாளர் பேசலாமா? அப்படியாக பதில் சொல்லப்பட்டது குறித்துப் பேசக்கூடாதென்றால், இத்தனை மதங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை; செமித்தியமதம் ஒன்றேயொன்றாகவே இருந்திருக்கும்; 'ஆலம் ஆரா" இன் பிறகு காதல் குறித்து ஓர் இந்தியப்படமுமே வந்திருக்கவாய்ப்பில்லை. இலக்கியத்திறனாய்வாளர் இந்த வகையிலே அணுகுதல் எவ்விதத்திலும் நேர்மையாகத் தோன்றவில்லை.

நிறையப்பேர், பின் - நவீனத்துவமென்பது, ஒரு குறித்த ஆண்டிலே குறித்த மனிதரூடாகத் தோன்றிய ஒற்றைக்கூறான கொள்கை வடிவமென்ற தோரணையிலே பேசிக்கொண்டிருக்கின்றார்களென்றால், மீதிப்பேருக்கு, இப்போதெல்லாம் அதை வரையறை செய்வது, தொடரங்காடியிலே தள்ளுவண்டியிலே அள்ளிப்போடும் அனைத்துப் பண்டங்களினதும் தொகுப்பாகிவிட்டது; அவரவர் வண்டிக்கு அவரவர் பட்டியலும் பண்டங்களும். ஆனால், "இது(மட்டுந்)தாண்டா பின் - நவீனத்துவம்" என்று தன் இரவுக்கனாப்பட்டியலை மட்டும் அச்சடித்துக் கடைவாசலிலே நின்று உள்ளே போகும் அத்தனை பேரிடமும் கொடுப்பது, தமிழிலக்கிய உலகத்திலே கொஞ்சக்காலமாக தொண்ணூறுகளின் பின்னரையிலே நடந்த விடயம் (காண்க: நடந்த விடயமென்றுதான் நினைத்திருந்தேன்; இப்போதும் நடக்கின்றதென்பதை, ரூமி ரவிக்குமார் சொல்வதாகக் குறித்திருப்பதிலிருந்து அறிந்து கொண்டேன்). வெறும் சொற்களை வைத்துக்கொண்டு வெருட்டுவதெல்லாம் ஆயதமிழ்க்கலைகளிலே அறுபத்தைந்தாவதான, சமகாலப்படைப்பிலக்கியக்கலையின் சாப்பாட்டிலையிலே அடக்கம். ஒளித்து மறைத்து வாசிக்காத சஞ்சிகை, பத்திரிகைகளிலே, படங்களிலே கழிவுறுப்புகளையும், பாலுறுப்புகளையும் அதுசார் உணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் சொட்டிவிட்டால், இடக்கரடக்கல் இல்லாத எதையுமே பின் - நவீனத்துவம் என்று வகைப்படுத்துதலும் அதை படைப்புத்துறைமுன்னெடுப்பென்றும் இலக்கியக்கெடுதலென்றும் ஆளாளின் விருப்புவெறுப்புக்கேற்ப தூக்கியும் தாழ்த்தியும் பிடித்துக்கொள்வது அநியாயம்.

சங்க இலக்கியங்களிலே அல்குல், கொங்கை என்று சொல்லப்படுவது அக்காலத்திலே வெட்கக்கேடாக இருந்திருக்குமா? (நான் வாசித்த அளவிலே ஆணுறுப்பினைப் பற்றி எங்கும் பேசப்பட்டதாது பண்டைத்தமிழ்க்குமுகாயம் ஆணாதிக்கம் மிக்கதாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாக உறுத்தவே செய்கிறது) பின்-நவீனத்துவம் தமிழிலே விரியப் பேசப்படாத காலத்துக்கு முன்னரே, 'குருதிமலை' புதினத்திலே வேலைசெய்யாப்போராட்டம் நடத்துவதை எதிர்க்கும் ஒரு பாத்திரம் பேசும், "(தேயிலை கிள்ளும்) தொழிலுக்குப் போகாமலிருந்தால், நாளைக்கு யாருக்குக் குண்டி காயும்?" கோமல் சுவாமிநாதனின் (பாலசந்தர் திரைப்படமாக இயக்கிய) "தண்ணீர் தண்ணீர் தண்ணீர்" இலே ஒரு பாத்திரம் கேட்கும், "குண்டி கழுவவே தண்ணீரில்லை." பாலுமகேந்திராவின் வீடு படத்திலே அர்ச்சனாவிடம் ஏமாற்றிய கட்டிடக்காரர் குறித்து ஒரு பாத்திரம் ஆத்திரத்தோடு பேசும், "விட்டுத்தள்ளும்மா; அவன் உன்னோட ஒரு பீக்கட்டிக்குச் சமனாவானா?" அல்லது, ஆதவனின் காகிதமலர்கள் தொட்டிருக்கும் சில பிரச்சனைகளின் (தாய்-மகன் இடையான உணர்வு) தன்மை; இந்தப்படைப்புகளிலே வாசகர், பார்வையாளர் எவருமே இது குறித்து இடக்கரடக்கலில்லாத படைப்பென முறையிட்டுக்கொண்டிருக்கவில்லை; சொல்லப்போனால், இந்தப்பதங்களில்லாவிட்டிருந்தால், அந்தப்படைப்புகளின் வீரியம் வெளிப்படாமல் ஸ்கலிதமாகியிருக்கும் ;-) மிகவும் சிறப்பாக, இப்படியான சொற்களைப் பயன்படுத்திய படைப்புகளாக, ஷோபா சக்தியின் "கொரில்லா", ராஜ்கௌதமனின் "சிலுவைராஜ் சரித்திரம்", பாமாவின் "கருக்கு", "சங்கதி" ஆகியவறினைச் சொல்லலாம். அவர்கள் இடக்கரடக்கல் இல்லாமலே நடைமுறையிலே புழங்கு சொற்களைப் பயன்படுத்திய விதமும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் மிகவும் கச்சிதமாகவுமிருந்தன; அங்கே ஆபாசமும் அசிங்கமும் உதட்டைத் துருத்தி எட்டிப்பாக்கும் தெத்திப்பற்களாகத் தோன்றவில்லை; வெறுமனே கதையை வலுப்படுத்தும் அவசியமே தெரிந்தது. (அமெரிக்காவிலும் இதே நிலைதான் இருந்திருக்கின்றது. "All in the Family" வரும் காலம் வரைக்கும் தொலைக்காட்சியிலே கழிப்பறை என்பது குறித்துப் பேசுவதென்பதே நினைத்துப் பார்க்கமுடியாததாம்; ஆனால், இந்தத்தொலைக்காட்சித்தொடரிலே கழிப்பறையிலே ஆணும் பெண்ணும் நடந்து கொள்ளும் விதத்தினைச் சுட்டிப் பேசுவதினை வைத்தே சில பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். "அந்நேரத்திலே பார்வையாளர்களும் அதனைப் பெரிது படுத்திச் சுட்டவில்லை; இயல்பான பிரச்சனையின் விவாதமென்றே கொண்டு போனார்கள்" என்று தயாரிப்பாளர் ஒரு நிகழ்ச்சியிலே சொன்னார்).

நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தவென்றே வரும் படைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை; சில சாருநிவேதிதாவின் படைப்புகள், ஷோபா சக்தியின் 'ம்', இருள்வெளியிலே வந்த ஐந்துபேர் கூட்டுப்புணர்தல் பற்றிய கதை (மகாபாரதக்கதை அல்ல) போன்றவற்றினை அவற்றுக்குள்ளே அடக்குவேன். பொருத்தமாக ஒரு படைப்பிலே/விமர்சனத்திலே ஒரு பதம் வருவதற்கும் அதிர்ச்சிக்காகத் திணிப்பதற்குமுள்ள வித்தியாசத்தினை இலகுவிலே கண்டுகொள்ளலாம்; உதாரணத்துக்கு, 'மன்மதன்' படத்துக்காக, "சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்" என எழுதினால், அது பக்கப்பக்கமான விமர்சனம் எழுதி அந்தப்படத்தினைக் கிழிப்பதிற்கும் மேலான விளக்கத்தினைத் தருகின்றது; அதே நேரத்திலே, "சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்" என ஐம்பது பதிவுகளின் பின்னூட்டங்களிலே 'மன்மதன்' ஐம்பதாவது நாளுக்காக போட்டுக்கொண்டு திரிவது அதிர்ச்சிக்காகவும் விளம்பரத்துக்காகவும் திணிப்பதாக மாறுகின்றது.

இங்கே கேள்வி, "சல்மாவின் கதையிலே பேசப்படவேண்டிய பிரச்சனைகளை, அதற்குரிய தொனியிலே, அதீதமின்றி, தேவையான பதங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்திப் பேசியிருக்கவில்லையா?" என்பதே? ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரமோ, பாமாவின் 'சங்கதி', 'கருக்கு' ஆகியன பயன்படுத்தாத விதத்திலே சல்மா பயன்படுத்தியிருக்கின்றாரா? இன்னும், இரா. முருகனின் அரசூர் வம்சம் குறித்துச் சிலாகித்து ரூமி எழுதியிருக்கின்றார்; அதிலே இராமு பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் / சம்பவங்கள் / செயற்பாடுகள் குறித்துச் சமாதானம் கொள்கிறார்/ சொல்கிறார் இவர்களைப்போலத்தான் பெருமளவில் சல்மாவும் பயன்படுத்தியிருக்கின்றாரென்றால், இராமுவுக்கு எதிராகவும் சல்மாவுக்கெதிராக வைத்த குற்றச்சாட்டுகளையொத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கவேண்டும், ராஜ்கௌதமன், பாமாவுக்குமெதிராகவும் அதேபோன்ற விமர்சனத்தினை முன்வைப்பாரா? (ரவிக்குமாரும் ராஜ்கௌதமனும் ஒரேமடத்திலேதான் வாயிற்காப்போராக இருக்கின்றார்களென்ற அபூர்வமான காரணமேதுமில்லாவிட்டால்). சல்மாவின் தொனி கதைக்கு ஆகாததெனில், அதைச் சுட்டும் விதம் வேறு; சாருநிவேதிதா குறித்த ரூமியின் ஆதங்கத்தோடு, "ஆனால் பைத்தியக்காரன் வழித்துக் காட்டுகிறான் என்றால் அதே போல செய்துகாட்டித்தான் அடுத்தவருக்குப் புரியவைக்க வேண்டும் என்ற நினைப்பை என்னவென்று சொல்வது? இதுதான் பின் நவீனத்துவமோ!" என்பது வேறு.

பொதுவிலே, முஸ்லீம் பெண்கள் எதைக் குறித்து (குறிப்பாக, இஸ்லாம் & முஸ்லீங்கள் சம்பந்தப்பட்டு) எப்படி எழுதவேண்டுமென்று தன் நம்பிக்கைகளை நியாயப்படுத்துவதாகவே (அல்லது நிர்ப்பந்தப்படுத்துவதாகவெனச் சொல்வோமா?) ரூமியின் சொற்கள் அறுத்துத் தெறித்து விழுந்திருக்கிறதாகத்தான் தோன்றுகிறது; அதிலுங்கூட, முஸ்லீம் பெண்ணாக இல்லாமல், தோப்பில் மீரான் போன்ற முஸ்லீம் ஆணாகவிருந்திருந்தால், சல்மாவுக்கெதிரான/ அவர் நூலுக்கெதிரான விமர்சனம் காட்டமாக வைக்கப்பட்டிருக்காதோ எனவும் ஐயமெழுகிறது (ரசூலுக்கு நிகழ்ந்தது வேறு; "ஏனொரு பெண்நபியில்லை வாப்பா?" என்று கேட்டது போலித்தனமான பெண்ணியக்கருத்தின் வழிப்பட்டிருக்கலாம்) . ஆங்கிலப்பேராசிரியரான ரூமி, பிறப்பாலேயோ வளர்ப்பாலேயோ முஸ்லீங்கள் அல்லாத காமம் குறித்துப் புனைகதை பதிந்த கமலா மார்க்கண்டேயா தொட்டு அண்மைய மேரி ஆன் மோஹன்ராஜ் வரையான பெண்பதிவுகள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்தால், சல்மாவின் படைப்பினைக் குறித்து இவருடைய பார்வை இன்னும் எமக்குத் தெளிவாகலாம்.

ரவிக்குமார் குறித்த என்னிடமிருந்த பிம்பம் (சில நண்பர்களினது கருத்துகளுங்கூட) கலங்கிப்போய்விட்டது; நாற்சார்மடத்திலே சில சீடர்கள் அகல புதுச்சீடர்கள் சேர்ந்திருக்கின்றார்கள்; பீடத்துக்கு அருகாமையிலும் சேய்மையும் வந்தும் போய்க்கொண்டிருமிருக்கின்றார்கள்; ரவிக்குமார் சிறந்த துவாரபாலகராயிருக்கின்றதாகவே தோன்றுகின்றது; ("பிள்ளைகெடுத்தான் விளை" குற்றக்குறளிகள் நுழையாமற் காத்ததினைப் பார்க்கவேண்டுமே). ஆனால், சல்மாவின் விமர்சனத்துக்கு "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி இமயமலையில் உச்சியின் சல்மாவை வைப்பதற்கு ரவிக்குமாரின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என்று ரூமி எழுதுவாரென்றால், இதேபோல, மனுஷ்யபுத்திரனுக்காக இத்துணை ரூமி கவலைப்படக்காரணமென்னவென இன்னொரு விதண்டாவாத ஆராய்ச்சியின் முடிவு, "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி மரியானா அகழியின் ஆழத்தில் சல்மாவை வைப்பதற்கு ரூமியின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என சல்மாவின் புதினம் குறித்த ரூமியின் இவ்விமர்சனத்தினை வாசிப்பவர் எழுதுவதிலே முடிவடையும். ஆனால், இவையெல்லாம் தேவையில்லாத கேள்விகளெனத் தோன்றுகின்றன; தமிழ்ப்படைப்புலக விமர்சனங்களிலே, வெளியீட்டுவிழாக்களிலே, அணிந்துரை, முகவுரை ஆகியவற்றிலே இருக்கும் கோளாறெல்லாம், படைப்பை விட்டுவிட்டு, படைத்தவனையும் படைப்புக்குப் பங்களித்தாரையும் அதீதமாகத் தூக்கிப்பிடித்துக்கொள்ளும் நோயின் குணம்வழிப்பட்டதெனவே தோன்றுகின்றது.


"காலியிடத்தில் ஒரு அழுகின கோழி முட்டை" என்பது சரிதான்; யார்/எங்கே 'காலி' என்பதுதான் குழப்பமாகிறது :-(

"Facts are stubborn things, and whatever may be our wishes, our inclinations, or the dictates of our passions, they cannot alter the state of facts and evidences." - John Adams

'05 ஓகஸ்ற், 26 வெள்ளி

பி.கு.; எழுதியதை, வாசிப்பின் இலகு எண்ணிப் பிரித்தது கழித்துக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து சீர்படுத்த முயன்றாலும், அஃது ஆகிற காரியமாகத் தெரியவில்லையாதலால், அப்படியே தொக்கவிட்டிருப்பதற்கு மன்னிக்கவும். "புரிகிறமாதிரி எழுதவும்",, "அகராதி தரவும்" போன்ற புண்ணிய பின்னூட்டங்களை எழுதத் தனியே ஒரு பின்னூட்டப்புத்தகம் வருங்காலத்திலே சேர்ப்பேனென இத்தால் உறுதிப்படுத்துகிறேன். :)

2 Comments:

At 8:39 PM, Anonymous Thangamani said...

நல்ல பதிவு பெயரிலி. தட்டச்சு செருமலுக்கு பிறகான வரிகளோடு நானும் இப்படிச்சொல்லவே விரும்புவேன். காலங்காலமாக மதம் வாழ்க்கை என்பது இதுதான் என்று இறுக்கிப்பிடிக்கிறது; மணல் வழிந்தோடுகிறது. அத்துமீறல்களும், ஒழுக்கக்கேடுகளும் ஒரு மவ்ல்வியின்/மதவாதியின்/பாதிரியின் கண்களுக்கு புனிதச்சின்னங்கள் போலவே தப்புவதில்லை. ஆனால் இவைகளை கழிப்பறைச்சுவரில் கிறுக்கிக்கொண்டிருக்கும் கரங்களில் இருந்தே பிறக்கின்றன புனிதப்புத்தகங்கள், ஆகமங்களின் வரிகள். ஆண்கள் இப்படித்தான் பேசுவார்கள்; பெண்கள் இப்படி பேசுவதேயில்லை; குழந்தைகள் இப்படி செய்வதே இல்லை; கடவுள் 3வகுப்புதான் படித்திருக்கிறார். ஒரு எழுத்தாளர் எங்கோ ஒருமுறை எழுதியிருந்தார், 'அழகிய பெண்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நம்பியிருந்தது மாதிரி' என்று.. உங்கள் நம்பிக்கைகள் உங்களைப்பற்றி மட்டுமே பேசுகின்றன, உண்மைகளைப்பற்றியல்ல...

பதிவுக்கு நன்றி!

 
At 12:20 PM, Blogger Narain said...

பெயரிலி, தராசு பற்றிய எழுதும் திட்டமிருந்தது. தராசுகள் அருமையான கருவிகள். உங்கள் பதிவினைப் படித்தவுடன், இங்கேயே எழுத தோன்றியது. அவரவர் தராசு தட்டுகளில் கீழே வைக்கப்பட்டிருக்கும் தாருக்கு ஏற்றாற்ப்போல் எடையில், கொள்ளளவில் மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறது. சில தராசுகளில் இந்த தார் அதிகமாக இருக்கிறது, அதனால் கிடைக்கும் கொள்ளவு மிகக் குறைவாக இருக்கும். ஆச்சர்யமாக சில சமயங்களில் சில தராசுகள் ஒற்றைதட்டுகளைக் கொண்டு இருக்கின்றன. அவைகளை ம்யுசியத்தில் வைக்கலாம். எல்லோரும் பார்ப்பார்கள், ஆனால் வாழ்வில் உபயோகப்படுத்தமுடியாது. சமயங்களில் சில ஒற்றை தராசுகள் கண்களில் படும். பட்டால் பார்த்துவிட்டு போய்க் கொண்டேயிருப்போம். இந்த மறுமொழி தராசுகளை பற்றி மட்டுமல்ல ;-)

 

Post a Comment

<< Home